சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் பொதுஇடங்களில் 1500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்தநாளையொட்டி, நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் துர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. தடைகளை நீக்கும், ஞானம் மற்றும் செழிப்பைக் கொடுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் இந்நாளில் , களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவி, சிறப்புப் பூஜைகள் செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடுவர். இறுதியில், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1லட்சம் 50ஆயிரம் சிலைகளை நிறுவ இந்துமுன்னணி முடிவுசெய்து, நடவடிக்கை எடுத்து. ஆனால், தமிழ்நாடு அரசு 80ஆயிரம் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.  அதன் தொடர்ச்சியாக  சென்னையில் 1 500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில்,   விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னையில் சிலைகளை வைத்து வழிபட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாகவும், தற்போதுவரை ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என கூறிய சென்னை காவல்துறை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.