மதுரை: ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என அடம்பிடித்து 3வது நாளாக போராடி வரும் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த  150 மாணவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், நேரடி தேர்வுகளை நடத்த உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்ட்த்தில் குதித்துள்ளனர்.  ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு எழுதச் சொல்வது நியாயமில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கட்கிழமை அன்று  மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து செமஸ்டர் தேர்வுகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இருந்தாலும் ஆன்லைன் தேர்வு வேண்டும் என அடம்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.  இதையடுத்து, இன்று காலை  மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அரசு பாலிடெக்னிக், மன்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது கொரோனா கட்டுப்பாடுகளை மீறுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 150 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.