சென்னை: நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். செப்டம்பர் 7ந்தேதி மாலை அவரது யாத்திரை தொடக்க விழா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, குமரியில் அவர் மேற்கொள்ளும் 7நாள் பாத யாத்திரை தொடர்பான பயணத்திட்டம், அதற்கான பொறுப்பாளர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரியில் 7ந்தேதி மாலை யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி 3 நாட்கள் தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், அவருடன் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான முழு விவரம் வெளியாகி உள்ளது.
ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை எனப்படும் பாத யாத்திரை, இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான யாத்திரையாகவும், மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரையாகவே கருதப்படுகிறது. அவரது நடைபயண நிகழ்ச்சி முழுவதும் நேரலையாக பார்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத ஒற்றுமை யாத்திரை”யை செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரையானது, 12மாநிலங்கள் , 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி ஏறக்குறைய 3500 கி.மீ தூரத்தை கடக்கிறது. இந்த பாதயாத்திரையானது 150 நாளில் நிறைவடையும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
பாரத் ஜோடா யாத்திரையை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, யாத்திரையை தொடக்குவதற்க முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து, தனி ஹெலிகாப்டரில் குமரி செல்கிறார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் காந்தி மண்டபம், காமராஜர் சிலைகளுக்கு மரியாதை செய்கிறார்.
அதைத்தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள், யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் பொதுப்பேரணி நடைபெறும் இடத்திற்கு நடந்து செல்கின்றனர். தொடர்ந்து அங்கு நடைபெறும் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்து பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
7ந்தேதி பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்க உள்ளார். முதல் நாள் 3.5 கிலோ மீட்டர் தூரம் தனது பாதயாத்திரை மேற்கொள்கிறார். 2-வது நாளான 8-ந்தேதி காலையில் 12 கிலோமீட்டர் தூரமும், மதியம் 6 கிலோமீட்டர் தூரம் என 18 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செய்கிறார். 9-ந்தேதி காலையில் 9 கிலோமீட்டர் தூரமும், மதியம் 7 கிலோமீட்டர் என மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 10-ந்தேதி காலையில் 9.5 கிலோமீட்டரும், மாலையில் 9 கிலோமீட்டர் என 18.5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி 8ந்தேதி முதல் 10ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். அவர் நடைபயணம் மேற்கொள்ளும் 3 நாட்கள் பயணத்தின்போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக கட்சி சார்பில் எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் என பலரை பொறுப்பாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுஉள்ளார்.
ராகுலின் பாதயாத்திரையின்போது, ஒவ்வொரு நாளும் 23 கி.மீ., வீதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் காலை 7மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
இந்த நடை பயணத்தின் போது பல்வேறு தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து, அவருடன் நடைபயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி, முதல்நாளில் ஒவ்வொரு அரைமணி நேரம் மற்றும் ஒரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, ராகுல்காந்தியின் நடைபயணம் செல்லும் பாதை, அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் இடங்கள் போன்ற முழு விவரங்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மற்றும் ஸ்ரீநகர் இடையே உள்ள தூரம் நடந்து செல்லும் ‘பாரத் யாத்ரிகள்’ என ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்களை கட்சி பட்டியலிட்டு உள்ளது. ஒரு நாளைக்கு அவர்கள் கடக்கும் சராசரி தூரம் 20-25 கி.மீ. 118 ‘பாரத் யாத்ரி’களில், ஒன்பது பேர் 51-60 வயதிற்குட்பட்டவர்கள், 118 தலைவர்களில் 20 பேர் 25-30 வயதுக்கும், 51 பேர் 31-40க்கும் இடைப்பட்டவர்கள், 38 பேர் 41-50க்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் (தமிழ்நாடு) தொடங்கும் யாத்திரை வடக்கே நகர்ந்து, திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விகாராபாத், நாந்தேட், ஜல்கான், இந்தூர், கோட்டா, தௌசா, அல்வார், புலந்த்ஷாஹர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு, மற்றும் ஸ்ரீநகரில் முடிவடைகிறது. யாத்திரையில் பங்கேற்பவர்கள் ‘பாரத் யாத்திரிகள்’, ‘அதிதி யாத்திரிகள்’ மற்றும் ‘பிரதேச யாத்ரிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 11 ஆம் தேதி, ‘பதயாத்திரை’ கேரளாவை அடைந்து, அடுத்த 18 நாட்களுக்கு பல்வேறு மாநிலம் வழியாகச் சென்று, செப்டம்பர் 30 ஆம் தேதி கர்நாடகாவை சென்றடையும். கர்நாடகாவில் 21 நாட்களுக்குப் பிறகு, யாத்திரை வடக்கு நோக்கி மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்.
‘பாரத் ஜோடோ யாத்ரா’ இணையதளத்தில் 37,000 க்கும் மேற்பட்ட பதிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, “தன்னார்வ யாத்ரா” என்ற புதிய வகைப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.