சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காலங்களிலும், மக்களை சேவையாற்றி வந்தவர்களில் தபால்காரர்களும் அடங்குவர். இதனால் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இதுவரை 15 தபால்காரர்கள் உயிரிழந்து உள்ளதாக முதன்மை தபால்துறை தலைவர்  தெரிவித்து உள்ளார்.

இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி தேசிய அஞ்சல் வாரமும் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் உலக தபால் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டது.  தமிழக அஞ்சல்துறையின் முதன்மை தபால்துறை தலைவர் செல்வக்குமார்  தலைமையில் நிகர்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் 1866-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழமையான தபால் பெட்டி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் அஞ்சல் தலை சேகரிப்பு மையத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய செல்வகுமார், கொரோனா  ஊரடங்கு காலமான கடந்த 6 மாதத்தில் தபால்துறைக்கு  40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. இருந்தாலும், இந்திய முக்கியமான காலக்கட்டத்திலும், தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது. இந்த அயராத பணியில் பணியாற்றியபோது தமிழகத்தில் பல அஞ்சல்துறை ஊழியர்கள் கொரேனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை  15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதும், தபால்துறை வெற்றிகரமாக இயங்கி வந்தது. பொதுமக்களுக்கு தபால்கள் பட்டுவாடா செய்வதிலும், வங்கி சேவைகளிலும் தபால்துறை சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.