சென்னை:
ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக முடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஸ்டெர்லைட் தாமிரா ஆலை காரணமாக தூத்துக்குடி பகுதியில் கேன்சர் உள்பட பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும், மக்களின் வாழ்வாதாரமான தண்ணீர் மாசுப்பட்டு இருப்பதாகவும் பல ஆண்டுகளாக புகார் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆலை விரிவாக்கத்துக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுத்திருந்த நிலையில், இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள், ஆலைக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கனவே இந்த ஆலை காரணமாக ஏராளமான துன்பத்தை அனுபவித்து வருவதாக கூறிய அந்த பகுதி மக்கள், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தற்போது கல்லூரி மாணவர்களும் பங்கேற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி லண்டன் போன்ற வெளிநாடு வாழ் தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம் போல தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மாநிலஅமைச்சரவை கூட்டத்திலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடுவதாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பை போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க நடைபெற்ற முயற்சி என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.