சென்னை: மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இது தாஜ்மஹாலை பார்வையிட வந்தவர்களை பல மடங்கு அதிகம் என இந்திய நாட்டிய விழா தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிய விழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

2021 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு 38,922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஆனால் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரியும் இடமாக அமைந்துள்ளது  என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சுற்றுலாத் துறை, மாமல்லபுரத்தில், ஆண்டுதோறும் டிசம்பர் – ஜனவரி மாதத்தில், இந்திய நாட்டிய விழாவை நடத்துகிறது. இவ்விழா, கடற்கரை கோவில் பகுதியில், இன்று துவங்கி, ஜன., 12 வரை நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஊரக தொழில் அமைச்சர் அன்பரசன் துவக்குகின்றனர். சுற்றுலா முதன்மைச் செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்துாரி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெறும் இந்திய நாட்டிய விழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர்   தா.மோ.அன்பரசன், “இசையும் கலையும், நாடு – இனம் – மொழி கடந்து மக்களை இணைக்கும் மாபெரும் சக்தியாகும். ஒரு நாட்டின் புகழ் அதன் செல்வ வளத்தில் இல்லை, அது அந்த நாட்டின் இசையிலும், கலையிலும் கலந்துள்ளது.

தமிழர்களின் தனித்த அடையாளமே அவர்களின் இசையும் கலையும் தான். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லபுரம். இந்த மாமல்லபுரத்திற்கு மேலும் பெருமை சேர்த்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உலக சதுரங்க போட்டியை மிக சிறப்பாக நடத்தி காட்டினார். இன்று உலகமே மாமல்லபுரத்தை திரும்பி பார்க்கின்றது. மாமல்லபுரத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தவும், தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க பரத நாட்டியம் – கிராமிய நடனங்களை அழியாமல் காத்திட வேண்டும் என்ற நல்லநோக்கில் 1992 முதல் 30 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நாட்டிய விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பரதக் கலை இந்திய நாட்டில் அழியாப் புகழ்பெற்ற பழமையான கலையாகும். பரதக்கலை தமிழர்களின் பண்பாட்டு – கலாச்சாரத்தை எடுத்துக் காட்டும் கலை ஆகும். தொன்மையான பரதக்கலையை தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும்.

2009-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் இந்த கலை விழா இந்திய நாட்டின் திருவிழாவாக அறிவிக்கப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த நாட்டிய விழா ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்டிய விழாவை காண மாமல்லபுரத்திற்கு உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அதிக அளவில் ஆண்டு தோறும் வருகின்றனர். தமிழகத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் மாமல்லபுரம் கலை நயமிக்க கற்சிற்பங்களின் கலை நகரம் ஆகும். யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை அறிவித்துள்ளது. இந்த கலை நயமிக்க சிற்பங்கள் உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. குறிப்பாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்திய நாட்டிய விழாவில் 32 பரத நாட்டிய குழுக்களும், 20 கிராமியக் கலை குழுக்களும், குச்சுபுடி, ஒடிசி, மோகினி ஆட்டம், பெங்கால் மற்றும் ராஜஸ்தானி கிராமியக் கலை குழுக்களும் என 62 கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளது.” என்றார்.

அடுத்து பேசிய  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்,  “பலதரப்பட்ட தனிச்சிறப்பு பெற்ற சுற்றுலா வளம் பொருந்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கிராமிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சுற்றுசூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, வணிக சுற்றுலா. கல்வி சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு ஒரு முழுமையான சுற்றுலா மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சீரியதலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டில் கோடை விழா, மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, உதகமண்டலத்தில் தேயிலை சுற்றுலா விழா, போன்ற பல்வேறு விழாக்கள் சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் சுற்றுலா தலங்களுக்கு வருகை புரிவதற்கும் அவர்கள் தங்கும் காலத்தினை அதிகரிப்பதற்கும் நடத்தப்பட்டு வருகின்றன.

மாமல்லபுரம் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கால முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் இரதங்கள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாக சிற்பங்கள் இங்கு உள்ளன. இவைதவிர, சிற்பத் தொகுப்புகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. தமிழகத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆறு உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு ஆகியன மாமல்லபுரத்தில் அமைந்துள்ளன.

இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில், தமிழகத்தில், மாமல்லபுரத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்திய நாட்டிய விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய நாட்டிய விழா 12.01.2023 வரை தினமும் தொடர்ந்து நடைபெறும். அதில் சிறந்த கலைஞர்களால் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், ஒடிசி மற்றும் கிராமிய நிகழ்ச்சியான கரகம், காவடி, தப்பாட்டம், தேவராட்டம் ஆகியவையும் இவ்விழாவில் இடம்பெறுகின்றன. தினந்தோறும் மூன்று குழுக்கள் வீதம் 21 நாட்கள் நடைபெறும் இந்திய நாட்டிய திருவிழாவில் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்த உள்ளார்கள்.

தமிழகத்திற்கு 2021 ஆம் ஆண்டில் 11.53 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2.01 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். 2021-ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவில் முதல் இடத்தையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாம் இடத்தையும் தமிழ்நாடு பெற்றது.

2021 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு 38,922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஆனால் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களுக்கு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரியும் இடமாக அமைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரைக்கு Blue flag அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர்விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ. 1.44 கோடி கருத்துரு மற்றும் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது – தனியார் பங்களிப்புடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜீனா தபசில் 3D லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ரூ. 5.00 கோடியில் ஒளி-ஒலி காட்சி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகளை இணையதள பயண நிறுவனங்களில் (Online Travel Aggregators) இணையதளத்தில் இடம்பெற செய்து பிரபலப்படுத்தி, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ. 1.50 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.”

இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.