லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் ஒமிக்ரான் அச்சுறுத்தலையொட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளதால், இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையொட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோ காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ”டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிசம்பர் 31ம் தேதி இரவு கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு விருந்துகளின் போது கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
அப்போது முகக் கவசங்கள் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். சிஆர்பிசியின் பிரிவு 144-ன் கீழ் லக்னோ நகரில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு இன்று முதல் வரும் ஜனவரி 5ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். எனவே கொரோனா தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்படும் நெறிமுறையைக் கண்டிப்பாகக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
உபி மாநில சட்டப் பேரவை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பகுதிகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய வாகனங்கள் செல்லக் கூடாது. அதுபோன்ற பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. ஆன்லைன் மூலம் தொடர்ந்து சைபர் கிரைம் காவலர் கண்காணிப்பை மேற்கொள்வர். வதந்திகளைப் பரப்புபவர்கள் மற்றும் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடுவோர் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.