சென்னை:
தமிழகத்தில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை முதல் மாவட்ட எல்லைகளை மூடவும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், எதற்கெல்லாம் தடை, எந்தவகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி என்பது குறித்து தமிழக முதல்வர் விவரமாக அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தொற்று நோய் சட்டம் 1897-ல் ஷரத்து 2-ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
தடை செய்யப்பட்டுள்ளவைகள்
அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோக்கள், டாக்ஸி போன்றவை இயங்காது.
மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் போக்குவரத்து தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டேக்சிகள் உள்ளிட்டவை இயங்காது.
பெரிய கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் இயங்காது.
தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்பத் தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டடப்பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்த நாள்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது.
கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் (டாஸ்மாக்) மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்.
அனுமதி வழங்கப்பட்டுள்ளவைகள்
இந்தத் தடைக்காலத்தில் அத்தியாவசியப் பொருள்களான உணவுப்பொருள்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும் விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை.
அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை இயங்கும்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.
மருத்துவம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்க வேண்டும்.
பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு தடையில்லை.
தடை உத்தரவு காரணமாக முதியோர் மட்டும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்,
கொரோனா தொற்றைத் தடுக்க அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
பிற இடங்களுக்கு சென்று வந்தவர்கள், கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது.
வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு.