டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிவற்றுக்கு எதிராக,  கடந்த டிசம்பர் 15 முதல் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடும் வன்முறை சம்பவங்களை அரங்கேறின. ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாங்கள் அது தொடர்பான செயல்களில்  இறங்குவோம் என்று இந்து சேனா என்ற அமைப்பினர் திடீரென்று அறிவித்தனர்.

ஆனால் டெல்லி சட்டம் ஒழுங்ககை மனதில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை இணை ஆணையர் ஸ்ரீவத்சவா கூறி இருப்பதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். எந்த விதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக் கூடாது என்று நாங்கள் பணிபுரிகிறோம் என்று கூறினார்.