சென்னை,
எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஆணையிட்டு சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில், மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான பேரில் ரூ.80 கோடி அளவில் பண மோசடியில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் மதன் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு காணாமல் போனார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது தாயார் மதனை கண்டுபிடிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து மதனை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வந்தனர்.
டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்தனர். மதனின் நெருங்கிய தோழி ஒருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில், மதன் அந்த தோழியிடம் போனில் தொடர்புகொண்டது தெரிய வந்தது. அதைவைத்து மதன் எங்கெல்லாம் சென்றிருந்தார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
அவர் தங்கியிருந்த இடங்களுக்கு சென்று தகவல்களை சேகரித்துள்ள போலீசார் வட மாநிலங்களிலும் முகாமிட்டு மதனை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் தனது பெண் தோழியை சந்திக்க மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
திருப்பூரில் ஒரு பெண்ணை சந்திக்க வந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மதனிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை முடிந்ததும் அவரை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் வீட்டில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை , டிசம்பர் 5-ம் தேதி வரை (14 நாட்கள் ) நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.