உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
பிப்ரவரி 26ம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைய உள்ள இந்த கும்பமேளா நிகழ்சசியில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மகாகும்பமேளா நிகழ்வில் வந்து நீராடும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே தாழிகள் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ICU முதல் பிரசவ அறை வரை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
செக்டார்-2ல் கட்டப்பட்ட 100 படுக்கைகள் கொண்ட மத்திய மருத்துவமனையில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராட வந்த நிறைமாத கர்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
இதில் 14 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இதில் இரண்டு குழந்தைகள் மட்டும் மகாகும்பமேளா ஏற்பாடுகளின் போதே 2024 டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மற்ற குழந்தைகள் ஜனவரி 13 மற்றும் அதற்கடுத்த நாட்களில் பிறந்துள்ளன.
இந்த குழந்தைகளுக்கு, கும்பம், கங்கா, பஜ்ரங்கி, யமுனா, சரஸ்வதி, நந்தி, பசந்த், பசந்தி, அமிர்தம், சங்கர், கிருஷ்ணா, அமாவாசை போன்ற பெயர்களை வைத்துள்ளனர்.
144 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டதாகவும் தற்போது அதேபோல் 14 குழந்தைகள் பிறந்திருப்பது மற்றொரு அரிய நிகழ்வு என்றும் அங்குள்ள மக்கள் கூறிவருகின்றனர்.