காக்னிசண்ட் நிறுவனத்தில் 13000 பேர் வேலை இழப்பு

Must read

நியூயார்க்

மெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்டில் சுமார் 13000 பேர் வேலை இழக்க உள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 166 இடங்களில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட், தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.  உலகெங்கும் உள்ள இந்த நிறுவன கிளைகளில் சுமார் 3 லட்சம் பேர் வரையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஐடி துறையில் நீடிக்கும் கடுமையான போட்டி மற்றும் மந்தநிலை காரணமாகத் தனது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.

அதாவது கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் 6,000 பேரை வேலையை விட்டு நீக்க காக்னிசண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் வீடியோ உள்ளிட்ட கண்டெண்ட் மாடரேசன் பிரிவிலும் காக்னிசண்ட் பணியாற்றி வருகிறது.   இந்தப் பணிகளை காக்னிசண்ட் நிறுவனம் விலக்கிக் கொள்ள எடுத்த முடிவால் இந்தியாவில் ஹைதராபாத் காக்னிசண்ட் நிறுவனத்தில் உள்ள சுமார் 500 பேர் உள்ளிட்ட 6000 பேர் பணி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

அத்துடன் நடுத்தர மூத்த பிரிவு பணியாளர்கள் 7,000 பேரின் வேலை வாய்ப்பையும் காக்னிசண்ட் பறிக்க உள்ளது.   இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலையை விட்டு நீக்கப்பட உள்ளனர்.  இந்த  கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் போதிய லாபம் ஈட்ட முடியாததால்தான் இந்த முடிவுக்கு காக்னிசண்ட் நிறுவனம் வந்துள்ளது .

இந்த நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் வெளியாகவுள்ள இந்த சூழலில் பணி நீக்கம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.   இந்த பணிநீக்கத்தின் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டாலர் வரையில் மிச்சப்படுத்த முடியும் என்று காக்னிசண்ட் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது

காக்னிசண்ட் நிறுவனம் ஒரு பக்கம் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.   அதே வேளையில் மற்றொரு பக்கம்  வேலையை இழந்த 5,000 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவுள்ளதாகவும் இதே காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article