டில்லி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துச் சொன்ன சீனாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அத்துடன் அந்த மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இன்று முதல் அவ்விரு புதிய யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் இன்று, “இந்தியா சீனாவின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தனது சட்டங்களிலும், நிர்வாக அமைப்பிலும் ஒருதலைபட்சமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை  முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. சீனா இதை வன்மையாகக் கண்டிக்கிறது.   காஷ்மீர் பகுதியில் இந்த சட்டத் திருத்தம், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது.

இன்னும் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே சா்ச்சைக்குரிய பகுதியானது உள்ளது.   இந்தியா எல்லைப் பகுதியில் அமைதி நிலவும் வகையில் சீனாவின் இறையாண்மைக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.  இந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில், ஜம்மு-காஷ்மீா் விவகாரம் தொடா்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாா் இன்று வெளியிட்ட அறிக்கையில் சீனாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.   ரவீஷ் குமார், “சீனாவுக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நன்கு தெரியும்.  காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும்.

எனவே இது குறித்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதை நாங்கள் சிறிதும் விரும்பவில்லை. இந்தியா எப்போதும் மற்ற நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தது கிடையாது. அதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் சிலவற்றைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாகச் சீனா அபகரித்துள்ளது. எனவே இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.