கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட மாத்தூரில்  1 லிட்டர் சாராயத்தை  ரூ1300 க்கு விற்று வந்த மளிகைக் கடைக்காரரை போலிசார் கைது செய்துள்ளனர்.

ஊரடங்குச் சூழலில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் பலரும் செய்வதறியாது குழம்பி வருகின்றனர்.

போதைக்காக ஷேவிங் லோஷனை குடிப்பது, யூ டுயூப் பார்த்து சாராயம் காய்ச்சுவது என சில இடங்களில் மோசமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் மாத்தூரை அடுத்த மூக்காகவுண்டனூர் கிராமத்தில், பெருமாள் என்பவர் தன் மளிகைக் கடையில் சாராயத்தை விற்கும்போது போலிசிடம் கையும் களவுமாக சிக்கினார்.

5 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வரும் பெருமாள் தற்போது சாராயத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் குறைந்த விலையில் சாராய வியாபாரிகளிடம் அதனை வாங்கி பல மடங்கு அதிகமாக விற்றுள்ளார். 1 லிட்டர் சாராயத்தை 1300 க்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெருமாளை கைது செய்த போலீசார், கடையிலிருந்து 9 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக 1 லிட்டர் சாராயம் 300 மற்றும் 400 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.