போபால்:
9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி, கடந்த ஐந்து நாட்களில் இரண்டு முறை கடத்தி 9 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

இந்த கொடூரத்தை இரண்டு கும்பல்கள் நிகழ்த்தி இருப்பது போலீசாரின் விசாரணைக்கு பின் தெரியவந்துள்ளது.

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, ‘சம்மன்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த பதினைந்து நாட்கள் பொது விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்ணுக்கு எதிராக நடந்துள்ள இந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கடந்த ஆறு நாட்களில் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி, மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி அவருக்கு தெரிந்த இளைஞன் ஒருவரால் கடத்தப்பட்டதாகவும், அந்த சிறுமியை கடத்தி சென்ற இளைஞன், தனது 6 நண்பர்களுடன் இணைந்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 5 ஆம் தேதி சிறுமியை விடுவித்த அவர்கள், சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதை தொடர்ந்து, அந்த சிறுமி இதுகுறித்து புகார் அளிக்க வில்லை என்று தெரிகிறது.

இந்த சம்பவம் நடைபெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், மீண்டும் அதே இளைஞரால் சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அப்போது, அந்த இளைஞனுடன் சேர்த்து 7 பேர் கும்பல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் காடுகளிலும், சாலையோரங்களில் உள்ள உணவகத்திலும் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

இவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி தன்னை மொத்தமாக 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்து வருவது, அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாகியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.