மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 நோயாளிகளை ஊசி போட்டுக் கொலை செய்ததாக இத்தாலியில் நர்ஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் பியோம்பினோ நகரின்  டஸ்கன் மருத்துவமனை ஒன்றில்  2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் அனுமத்க்கப்பட்டிருந்தவர்களில் 61 முதல் 88 வயதுக்கு உட்பட்ட 13 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்தனர். அவர்களின் உடலில் ரத்தம் உறைதலுக்கான ‘ஈப்ரினா’ என்ற  மருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அங்கு நர்ஸ் ஆக பணிபுரியும் 56 வயதான பவுஸ்ட்டோ போனினோ தான் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

italy-nurse-arrested
நர்ஸ் பயன்படுத்திய ‘ஈப்ரினா’ என்ற உடலில் ரத்தம் உறைதலுக்கான மருந்து.

 
‘ஈப்ரினோ’ என்ற மருந்து 10 மடங்கு அதிகமாய் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் இந்த மருந்தினை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதில்லை. இருந்தும் இப்படி அதிகமான மருந்து உட்செலுத்தப்பட்டதால்தான் நோயாளிகள் படுத்த படுக்கையாகி இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இம்மருத்துவமனையில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை திடீரென் 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்தது. இதனை அடுத்து மரணத்திற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக ஆராய்ந்தது. அதில் இந்த திடுக்கிடும் சம்பவம் தெரியவந்தது. இறந்த 13 பேரையும் போனினோ என்ற நர்ஸ் மட்டுமே கவனித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
அதுவும் நர்ஸ் ஒருவர் இப்படி கொடூரமான முறையில்  கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இத்தாலி நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இதை மனித சமூகத்தில் அவலத்தின் உச்சம் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கொலையாளியான நர்ஸ் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்றும் அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் இதற்கு முன்னர் 38 நோயாளிகளை ஊசி போட்டுக் கொலை செய்த 44 வயதான நர்ஸ் டேனியாலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நோயாளிகளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டிருந்த 38 பேருக்கு பொட்டாஷியம் என்ற மருந்தினை அளவுக்கு அதிகமாய் கொடுத்து கொலை செய்ததும், அப்படி கொலை செய்யப்பட்டவர்களுடன் ஷெல்பி போட்டோ எடுத்து மகிழ்ச்சி அடைந்ததும் பின்னர் தெரியவந்தது.