சென்னை

இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

”தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளைப் பொருத்தவரை பிளஸ்2 வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இந்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 12ம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்தபடி பிளஸ் 2 வகுப்புக்கு இன்று தொடங்கி 17ம் தேதி வரையிலும், 11 ம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு வருகிற 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.

சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 249 பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் சுற்று இன்று(12ம் தேதி) முதல் 17ம் தேதி வரையிலும், 2ம் சுற்று பிப்ரவரி 19 முதல் 23ம் தேதி வரையும் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் படி எந்தவிதமான புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தப்பட வேண்டும்.

செய்முறைத்தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in/ என்ற
முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் தாமதம் கூடாது. தாமதம் ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே பொறுப்பாவர்கள். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறைத்தேர்வை அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 4 பிரிவுகளாக நடத்தலாம். எண்ணிக்கை 120க்கு கீழே இருந்தால் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். அக மற்றும் புறத் தேர்வு மதிப்பெண்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. மாணவர்களின் வருகை குறித்த பதிவுகள் அந்தந்த மையங்களில் பாதுகாக்கப்பட வேண்டும். கண்காணிப்பாளர்கள் அந்தந்த பள்ளிகளை சேர்ந்தவர்களாக அல்லாமல் வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்க வேண்டும்.  ”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.