சிம்லா: இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு பிரசாரம்  நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடைசி நேர பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவி வகித்து வருகிறார். இமாச்சல பிரதேச சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 35 இடங்கள் தேவை. அதன்படி  வரும் 12ந்தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் பாஜக காங்கிரஸ் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

வாக்குப்பதிவுக்கு  இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிரமான கடைசி கட்ட பிரசாரத்தில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா, வீடு வீடாகச் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  மேலும், இன்று ஒரே நாளில், 68 தொகுதிகளிலும் பொதுக்கூட்டத்ததை நடத்தி வருகிறது. இதுமட்டுமின்றி, மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,  முதியோருக்கான பழைய ஓய்வுதியத் திட்டத்தினை திரும்பக் கொண்டு வருவது, 300 யூனிட் இலவச மின்சாரம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக ரூ.680 கோடி மற்றும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்குவது போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.