சென்னை: சென்னை, கோவைக்கு அடுத்து ஐடி துறையில் கால் பதித்துள்ளது டாலர் என்று அழைக்கப்படும் திருப்பூர். இங்கு அமைக்கப்பட்டு வரும் மினி டைடல் பார்க் மூலம் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
டைடல் பார்க் என்றால் ஆங்கிலத்தில் Tamil nadu information technology development corporation என்பதன் சுருக்கம்தான் டைடல் பார்க். இதற்கான தமிழ் விளக்கம் என்பது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கான நிறுவனம் என்பதே. இந்த நிறுவனமானது தமிழகத்தின் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடி பூங்காக்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அலுவலகத்தை அமைத்து செயல்படலாம். டைடல் நியோ பார்க் என்று அழைக்கப்படுவது டைட்டில் பார்க்கின் சிறிய அளவிலான கட்டிடமாகும். ஆரம்ப கட்ட அதாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் இந்த கட்டிடங்களில் இருக்கும். இதுவே நியோ டைடல் பார்க் என அழைக்கப்படுகிறது.
இந்த வகையான கட்டிடங்கள் சுமார் 50,000 அடி சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி வரையிலான இடத்தில் அமைக்கப்படும். தமிழகத்தில் சுமார் 7 மாவட்டங்களில் இந்த டைடல் மினி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஆகிய பகுதிகளில் இந்த டைடல் நியோ பார்க்கானது அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மினி டைடல் பார்க், தகவல் தொழில்நுட்ப துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கள் கனவை நினைவாக்கும் இடமாகவும் அமைய உள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் சீராக அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் மினி டைடல் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தற்போதைய சமூகத்தில் இன்றியமையாததாகவும், அவசியமானதாகவும் உள்ளது. அதன் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறையை தேர்ந்தெடுத்து கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐடி துறையில் கல்வி கற்றவர்கள் பெங்களூர், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பணிக்கு சென்று வந்தனர். தமிழ்நாடு முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது 2000ம் ஆண்டு சென்னையில் முதல் டைடல் பார்க் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2011ம் ஆண்டு கோவையிலும் டைடல் பார்க் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக அரசின் முயற்சியால் பெங்களூர், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கால் பதித்த பெரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் மீது தங்களது கவனத்தை திருப்பின. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஐடி துறையில் கல்வி பயின்றவர்கள் சென்னை மற்றும் கோவை என தங்கள் மாநிலத்திலேயே பணிபுரியும் வாய்ப்பை பெற்றனர். 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தகவல் தொழில்நுட்ப துறையில் மாநிலத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும், வேலை வாய்ப்பை பெருக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பார்க் உருவாக்கும் பணிகளை முன்னெடுத்தது. விழுப்புரம், சேலம், தஞ்சை மாவட்டங்களில் ஏற்கனவே, மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, நாமக்கல் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள திருமுருகன்பூண்டியில் 7 தளங்களுடன் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்கள் சிறிய அளவிலான கிளைகளை தேவையான கட்டமைப்புகளுடன் அமைக்கும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னலாடை துறையில் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணி ஈட்டி தரக்கூடிய திருப்பூரில் தகவல் தொழில்நுட்ப துறையிலும் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கான முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது. திருப்பூர்-அவிநாசி செல்லும் வழியில் உள்ள திருமுருகன்பூண்டி என்னும் பகுதியில் தரைத்தளம் உட்பட 7 தளங்கள் கொண்ட கட்டிடமாக மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தளமும் சுமார் 6,500 சதுர அடியென 66,139 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தரைத்தளத்தில் பார்க்கிங் வசதி, உணவு கூடங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தளங்களில் தகவல் தொழில்நுட்ப அலுவலக கட்டமைப்பு பணிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலைதொடர்பு வசதிகள், மழைநீர் சேகரிப்பு, ஏடிஎம் அறைகள், ஜெனரேட்டர் அறை, பாதுகாப்பாளர் அறை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம், கழிவறைகள் மற்றும் 2, 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது 8 ஸ்டார்ட் அப் அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை செயல்படுத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு 600 முதல் 1200 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஐடி துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயில்கின்றனர். ஆனால் இவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது பெங்களூர், புனே, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு சென்று பணியாற்றுவதில் தயக்கம் காட்டி அந்த வேலைகளை புறக்கணித்துவிட்டு சொந்த ஊரில் கிடைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையை போக்கவும், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய வகையிலும் அரசு கோவை, சென்னை மட்டுமல்லாது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாவட்டங்களில் உருவாக்கியுள்ள இந்த மினி டைடல் பார்க், தகவல் தொழில்நுட்ப துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கள் கனவை நினைவாக்கும் இடமாகவும் அமைய உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு அனைத்து நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை சீராக மேற்கொள்ள இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என கூறப்படுகிறது. கடந்த வாரம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் போன்ற நகரங்களில் மினி டைடல் பார்க் வருவது மகிழ்ச்சியானது எனவும், இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துச் சென்றார். மேலும் ஒரு சில திருப்பூர் சார்ந்த சில நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்கள் அலுவலகத்தை இங்கு அமைக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், கட்டுமான பணிகள் முடிவடைவதற்குள் மேலும் சில நிறுவனங்கள் இங்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நியோ டைடல் பார்க்
திருப்பூரில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் என்பது நியோ டைடல் பார்க் என்று அழைக்கப்படுகின்றது. திருப்பூர் போன்ற நகரங்களில் அமைக்கப்படுவதன் மூலம் ஐடி துறை சார்ந்த வாலிபர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். சம்பந்தப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டு வாலிபர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்காக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப சேவை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பெரிய முதல் சிறிய நகரங்கள் வரை விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் விரைவில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளது.
புதிய நிறுவனங்கள் ஆர்வம்
புதிதாக தொடங்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைப்பதைவிட இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெருநகரங்களில் வாடகைக்கு மற்றும் பிற சேவைகளுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய சூழல் இருப்பதால் சிறு நகரங்களை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் சிறு நகரங்களிலும் ஏராளமான ஐடி துறை மாணவர்கள் இருப்பதாலும், பெரு நகரங்களுக்கு இணையான வளர்ச்சியை இங்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையிலும் சிறு நகரங்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.