மகாராஷ்டிரா மாநிலம் மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் அலுவலகத்துக்குள் 12 வயது சிறுவன் சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிபவரின் 12 வயது மகன் மோஹித் அஹிரே அந்த மண்டபத்தின் அலுவலகத்தில் அமர்ந்து செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது சிறுத்தை ஒன்று அந்த சிறுவனை கவனிக்காமல் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து அவனைக் கடந்து அடுத்த அறைக்குள் சென்றது.

சிறுத்தையைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அந்த சிறுவன் சில வினாடிகள் கூட தாமதிக்காமல் ஓசையின்றி தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து இறங்கி வெளியே சென்று கதவை தாழிட்டான்.

பின்னர் ஓடிச் சென்று தனது தந்தையிடம் அலுவலக அறைக்குள் சிறுத்தையை சிறைபிடித்துள்ளதாக கூறியதை அடுத்து வனத்துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது.

கடந்த சில நாட்களாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அதே பகுதியில் இருந்த வனத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து அந்த சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.

12 வயது சிறுவன் தனது அருகிலேயே சிறுத்தையைப் பார்த்தும் எந்தவித பதற்றமுமின்றி கத்தி கூச்சல் போடாமல் இறங்கிச் சென்று கதவைத் தாழிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

இது தொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் அந்த பகுதி மக்கள் அவனை பாராட்டியதோடு அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.