நெல்லை:  கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் வெள்ளப்பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.  பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதனால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.  எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது மீட்புபணிகள்  வேகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில இடங்களில்  இன்று 5வது நாளாக வியாழக்கிழமையும் மழைநீா் வழிந்தோடாமல் தேங்கி நின்றது.

இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழுவினர், வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இக்குழுவினர் நேற்று காலை, நெல்லைமாவட்டத்தில் ஆய்வை தொடங்கினர். முன்னதாக, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு வீடியோ காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, வெள்ளம் பாதித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மழையில் நனைந்த கோப்புகள் மற்றும்தளவாடப் பொருட்களை பார்வையிட்டனர். தாமிரபரணி ஆறு, அதன் நீர்வரத்து, வெள்ளம் சூழ்ந்த திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், டவுண் காட்சி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் கன மழையின் காரணமாக வீடு இடிந்து மின்சாரம் தாக்கி இந்த 12 பேர் உயிரிழந்ததாக தெரியவருகிறது. அதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்துள்ள பலரின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூராய்வு செய்ய கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.