சென்னை: தமிழகஅரசு கொண்டுவந்துள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நகர்ப்புற பகுதி வளர்ச்சிக்கான நமக்கு நாமே திட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசால் மீண்டும் கடந்த ஆண்டு (2021) முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல், பொதுக்காதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல் போக்கு வரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சோலார் மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நவீன நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல், புதிய பாலங்கள், குறுக்கு பாலம், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடங்களை அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, நமக்கு நாமே திட்டப்படி, நேற்று (4-7-22 ) வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 குளங்களை சீரமைக்கும் பணிகள் ரூ.154.94 லட்சம் செலவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.138.48 லட்சம் மற்றும் அரசு 16.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
அதே போல் மாநகராட்சி பூங்கா, விளையாட்டு திடல், மற்றும் மரம் நடுதல் ஆகிய 56 பணிகளுக்கு ரூ.540.14 லட்சம் ஒதுக்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.321.50 லட்சம் மற்றும் அரசு ரூ.218.65 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய 78 பணிகள் ரூ.308.89 மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.121.29 லட்சம் மற்றும் அரசு 187.60 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி அழுகுபடுத்த மொத்தம் 66 இடங்களில் ரூ.353.19 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.237.88 லட்சம் மற்றும் அரசு ரூ.115.30 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 குளங்களை சீரமைக்கும் பணிகள் ரூ.154.94 லட்சம் செலவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.138.48 லட்சம் மற்றும் அரசு ரூ.16.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக 23 இடங்களில் ரூ.82.52 மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.56.41 லட்சம் மற்றும் அரசு ரூ.26.11 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
மயானபூமி பராமரிப்பு பணிகள் 2 இடன்களில் ரூ.313.45 செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.313.45 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
மருத்துவமனை, சாலை, சாலைத்தடுப்பு, நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற இதர மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.338.35 லட்சம் செலவில் 47 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பங்களிப்பானது ரூ.162.93 லட்சம் மற்றும் அரசு ரூ.175.42 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
அதன்படி மொத்தம் 276 பணிகளுக்கு ரூ.2091.47 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் மொத்தம் தனியார் பங்களிப்பானது ரூ.1351.94 லட்சம் மற்றும் அரசு ரூ.739.53 லட்சம் பங்களிப்பு செய்துள்ளது.
அதன்படி மொத்தம் 351 பணிகளுக்காக ரூ.2520.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 276 பணிகளுக்காக மொத்தம் ரூ.2091.47 லட்சங்கள் ஒதுக்கப்பட்டது (தனியார் பங்களிப்பு ரூ.1351.94 லட்சம், அரசின் பங்களிப்பு ரூ.739.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது). இதில் 118 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.484.84லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
100 பணிகள் ரூ.1094.29 லட்சத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. 35 பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பு ரூ.281.74 லட்சம் ஆகும். மீதமுள்ள 23 பணிகள் பல்வேறு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பு ரூ.230.96 லட்சம்.
இதர 73 பணிகளுக்கு 1053.71லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 351 பணிகளில் 118 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 100 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 35 பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதர 73 பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புற கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அல்லது நிறுவனங்களின் சார்பில் திட்டத்திற்கான மதிப்பீட்டில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நிதி செலுத்தப்பட வேண்டும். மேலும், நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பாணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பிற்கு அதிகப்பட்ச வரம்பு எதும் இல்லை. நிறுவனங்களால் வழங்கப்படும் சமூக பங்களிப்பு நிதியையும் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். 50% மேல் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் அந்த பணிகளை சென்னை மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.