சென்னை:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணக்கு காட்டாத 11,640 பேர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன்: கடந்த உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யாத 11,640 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுகூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்யாததால் 11,640 பேர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4,784 நபர்களும், ஊரக உள்ளாட்சிகளில் 6,865 நபர்களும் என 11,640 நபர்கள் மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தகுதி நீக்கம் ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் முடிவுறாதவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் ஆவர்.
வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
வெள்ளை நிறம்: கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு
இளஞ்சிவப்பு நிறம்: கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு
பச்சை நிறம்: ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு
மஞ்சள் நிறம்: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு
2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
14,690 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்: நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிகளைக் கொண்டு மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
மறைமுகத் தேர்தல் விவரம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 31 மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் 31 துணைத் தலைவர் பதவியிடங்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் 388 துணைத் தலைவர் பதவியிடங்கள், 12,524 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 13,362 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளில் 12 மாநகராட்சி மேயர் மற்றும் 12 துணை மேயர் பதவியிடங்கள், 124 நகராட்சி மன்றத் தலைவர் மற்றும் 124 துணைத் தலைவர் பதவியிடங்கள், 528 பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்கள் மற்றும் 528 துணைத் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 1,328 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும்.
இந்தப் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் நாள் நவம்பர் 2 ஆகும் என்றார்.
நேரடி தேர்தல்: 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும் என்றார் அவர்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பு விவரம்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.9 ஆயிரம்
கிராம ஊராட்சித் தலைவர் ரூ.34 ஆயிரம்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூ.85 ஆயிரம்
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ. 1.70 லட்சம்
பேரூராட்சி 3-ஆம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.17 ஆயிரம்
நகராட்சி மன்ற உறுப்பினர் (முதல் நிலை மற்றும் 2-ஆம் நிலை) ரூ.34 ஆயிரம்
நகராட்சி மன்ற உறுப்பினர் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) ரூ.85 ஆயிரம்
மாநகராட்சி மன்ற உறுப்பினர் (சென்னை தவிர) ரூ.85 ஆயிரம்
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் ரூ.90 ஆயிரம்