டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது.  அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,15,736 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில், இதுவரை  8.70 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், ஒராண்டை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கடந்த ஆண்டு (2020) உச்சம்பெற்றிருந்த கொரோனா, ஆண்டு இறுதியில் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன், தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. ஆனால்,   தற்போது உருமாறிய நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இது கொரோனாவின் 2வது அலை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  இந்த பரவலானது வேகமாக இருக்கும் என்றும் எச்சரித்திருப்பதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், முக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில்,  நேற்று தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன்,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக அன்றாட தொற்று பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,03,558 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமானது என்பதால் பொதுமக்கள் இரண்டாவது அலையை எதிர்கொள்ள அரசுடன் கைகோத்து பங்களிக்க வேண்டும் என்று கூறினார்.

மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்ற பழக்கவழக்கங்களுக்கு விடைகொடுத்துவிட்டதால் தொற்று பாதிப்பபு மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாக கூறியவர்,  மக்களின் தற்காப்பு நடவடிக்கையை நான் சமூக தடுப்பூசி என்றழைக்கிறேன். அதை மக்கள் தவறாமல் கடைபிடிப்பதோடு தகுதியானவர்கள் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அடுத்த 4 வாரங்கள் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது என்று எச்சரித்தவர், நமது நாட்டை பொறுத்தவரையில்வ,  ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கொரோனா பலி வீதத்தை கணக்கிடும்போது அது தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும்,   18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும  கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 1,15,736 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  59,856 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர்: 1,17,92,135 பேர். நேற்று ஒரே நாளில் 630 பேர் பலியாகினர் . இதுவரை பலியானோர் மொத்த  எண்ணிக்கை: 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் சிகிச்சையில் இருப்போர் மொத்த எண்ணிக்கை 8,43,473 பேர்.

இதுவரை கொரோனா   தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை: 8,70,77,474 பேர்.