சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கும், சிலைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று திமுக, அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கீழே அண்ணா படம் அலங்கரித்து வைக்கப்பட்டருந்தது. அந்த படத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் சென்ற முதலமைச்சர் அங்கு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்விலும் அமைசர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, மா. சுப்பிரமணியன், மற்றும் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி உருவப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல, திருவண்ணாமலை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் திமுகவினர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கண்ணாடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, ஆங்காங்கே திமுகவினர் அண்ணாவின் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.