உ.பி. மற்றும் ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான அம்பர் கோட்டையின் பாதுகாப்பு கோபுரத்தில் நின்று செல்ஃ பி எடுத்துக்கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டையின் பாதுகாப்பு கோபுரத்தில் ஏறி சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த போது மழை அதிகமாகப் பெய்ததை அடுத்து கோபுரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கியவர்களை மின்னல் தாக்கியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிலர் அப்போது செல்ஃ பி எடுத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது, இந்த சம்பவத்தில் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் உத்தர பிரதேச மாநிலத்திலும் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த இரு மாநிலங்களிலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.