சென்னை

முதல் முறையாக நடைபெற உள்ள 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.

மருத்துவ படிப்பு உள்ளிட்ட பல பட்டப் படிப்புக்களுக்கு மத்திய அரசு நீட் தேர்வை கட்டாயம் ஆக்கி உள்ளது.    நீட் தேர்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.   இதனால் தமிழக அரசு 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு உண்டு என அறிவித்துள்ளது.    முதன் முதலாக நாளை முதல் 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7070 பள்ளியில் கல்வி பயிலும் 8,61,915 மாணவ மாணவியரும் தனி தேர்வர்கள் 1753 பேரும்  இந்த தேர்வை எழுத உள்ளனர்.  இதில் 4,60,406 பேர் பெண்கள் மற்றும் 4,01,509 பேர் ஆண்கள்.   மொத்தம் 2795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   அதில் சென்னையில் 156 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.   காப்பி அடிப்பதை கண்டு பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன.   தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களும் மொபைல் எடுத்து வரக் கூடாது எனவும் அப்படி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 62 சிறை தண்டனைக் கைதிகள் தேர்வு எழுத உள்ளனர்.