ஆவடி: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் நாளை முதல் 11 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் 100 அரங்குகளில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6 ஆம் தேதிமுதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு பதிப்பாளர்களும் 1,000க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாட்டு மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், ஆவடியில் சுமார் 100 அரங்குகளுடன் கூடிய புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

10நாட்கள் நடைபெறும், இந்த புத்தககண்காட்சியில் ரூ.1 கோடிக்கும் மேலான புத்தகங்கள் வைக்கப்பட உள்ளதாகவும், இதை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ஆவடி,எச்.பி.எப். மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக புத்தக கண்காட்சியின் ‘லோகோ’ அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி ‘லோகோ’ வை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..