சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் அரசியல் உள்விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றி விட்டு சத்யமூர்த்தியை அந்த பதவிக்கு கொண்டுவந்தார். அதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நில விவகாரமும் ஒன்றாக பேசப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏற்பட்ட அரசியல் களேபரத்தில் சத்யமூர்த்தி அந்தபதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். காலியாக இருந்த அந்த பதவிக்கு அப்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் பரிந்துரைக்கப்பட்டு போலீஸ் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவரது நியமன பின்னணியில் அரசியல் இருந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகலா தரப்புக்கு நெருக்கடி தரவே டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு பதவியை பன்னீர்செல்வம் வழங்கியதாக கூறப்பட்டது. அதேநேரம் சசிகலா அணியிலிருக்கும் எடப்பாடி முதலமைச்சரானதும் டேவிட்சனை மாற்றிவிடுவார் என்று சொல்லப்பட்டதுபோல் நடந்துள்ளது.
ஆனால் டேவிட்சன் மாற்றப்பட்டது குறித்து பல்வேறு சம்பவங்கள் சொல்லப்படுகிறது.
உளவுத்துறையில் அனுபவமிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்றும் அரசியல் தலையீட்டில் சிக்காதவர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையிலான அதிகார போட்டியில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அதில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம் ஒருவர். ஆனால், ஜார்ஜை மாற்ற முடியவில்லை. உளவுத்துறை ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
அவரை நியமிக்க பரிந்துரை செய்ததில் சசிகலா புஷ்பா எம்.பி.யும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்கள் சசிகலாவுக்கு தெரிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றம் செய்ய கூறியுள்ளார். உடனடியாக அவரை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மீண்டும் போலீஸ் நலப்பிரிவுக்கு மாற்றியதோடு உளவுத்துறை ஐ.ஜி பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்புக்கு வேண்டப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் இந்தப்பதவியில்நியமிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.
சென்னை மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜி தாமரைக்கண்ணன் அல்லது ஸ்ரீதர் பெயர்களும் அடிபடுகின்றன..