சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 3  நாட்களில் 11.28 லட்சம் லிட்டர் கூடுதல் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தது. அதையடுத்து, இந்த விலை குறைப்பு மறுநாளே அமலுக்கு வந்தது. இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன், , “தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. பெட்ரோல் விலை உயர்வால் இவர்களின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெட்ரோல் விலை குறைப்பு பொருளாதார நிபுணர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.  “பெட்ரோல் விலை குறைப்பால் மக்கள் பயனடைந்துள்ளதை புள்ளிவிவரங்கள்  உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகஸ்டு 14ஆம் தேதி முதல் ஆகஸ்டு  17ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ள விலைக்குறைப்பாக மாறியிருப்பது  இதன்மூலம் தெரியவருகிறது என்று கூறினார்.