சென்னை: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு, தாங்கள் படிக்கும், படித்த பள்ளிகளிலேயே பதிவுசெய்யலாம் என தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியில் வெளியிடப்பட்ட நிலையில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக தங்கள் படித்துவரும் பள்ளியில் இணையதளம் வாயிலாகப் பதிவுசெய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் கொ. வீர ராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“10, 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in இல் பதிவுசெய்து அடையாள அட்டை பெற அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், இத்துறையின் இணையதளம் வாயிலாகப் பதிவுசெய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு தற்போது 2021ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17.09.2021 அன்று வழங்கப்பட உள்ளதையடுத்து, 17.09.2021 முதல் 01.10.2021 வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளிலும் இவ்வசதியினைப் பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in பதிவுசெய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மாணவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவுசெய்து இருப்பின் அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று, தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி 12ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை கூடுதலாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று புதிதாகப் பதிவுசெய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகிப் பதிவுகள் மேற்கொள்ளலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.