சென்னை:  டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சமீபத்தில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால், பொதுமக்களும் அவதியடைந்துள்ளதுடன்,  மாணவ மாணவர்களின் பாடப்புத்தங்களும் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. சாத்தனூர் அணை திறப்பால் பல மாவட்ட கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்ட நிலையில், அங்கு குடியிருந்து வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,  அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறியதுடன்,   தமிழகத்தில் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே  உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது பெய்துள்ள புயல் மழை காரணமாக, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக  கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்  வெள்ளத்தில் மிதக்கின்றன.

அதனால்,   டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வு மழை பாதிப்பு காரணமாக ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றார். மேலும்,   அதிக வெள்ள பாதிப்பு உள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்,   உள்ள தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ் வைத்திருக்கும் அறைகள் தரைதளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறியவர்,   டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ள அரையாண்டு தேர்வு, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீர் தேங்கியிருப்பின் ஜனவரியில் நடத்தப்படும் என்று கூறினார்.