மதுரை:
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவம் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.
பொதுவாக அம்மன் கோவில்களில் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகுசிறப்பாக நடைபெறும். சித்திரை திருவிழாவை தொடர்ந்து வைகாசி வசந்த உற்சவமும் 10 நாட்கள் நடைபெறும்.
இந்த அண்டு வசந்த உற்சவம் வரும் 9ந்தேதி முதல் 18ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக 9-ந் தேதி முதல் 17-ந் தேதிவரை சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் எழுந்தளி பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
தினசரி மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளும் சுவாமிகள், புதுமண்டபம் சென்று அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை முடிவடைந்தவுடன் 4 சித்திரை வீதிகள் சுற்றி கோவிலை வந்தடைவர்.
இறுதிநாளான 18-ந்தேதியும், காலை புது மண்டபத்தில் எழுந்தருளி, பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிசேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளை சுற்றி வந்து கோவிலை வந்தடைவர். இதைத்தொடர்ந்து 19-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை அருளாளர் திருஞான சம்பந்தர் திருவிழா நடைபெறுகிறது மேலும் அன்று இரவு 8 மணியளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளிலும் வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.
வசந்த உற்சவ விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கோவில் சார்பில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.