சென்னை:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் பேரம் பேசியது தொடர்பாக, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவ மனைகள் இடம்பெற்றுள்ளன.  இதில் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையும் ஒன்று.

கடந்த  மாதம், குளோபல் மருத்துவமனை நிர்வாகம், சில மருத்துவமனை ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து. இதைத்தொடர்ந்து,  108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் குளோபல் மருத்துவமனை மருத்துவர் பேசும் ஓடியோ ஒன்று வெளியானது.

இந்த ஆடியோவை பணிநீக்கம் செய்த ஊழியர்கள் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், குளோபல் மருத்துவமனை நிர்வாகியான பாஸ்கர்ரெட்டி  பேசும்போது, விபத்தில் காயமடைந்தவர்கள், அல்லது நோய்வாய்பட்டவர்களை குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தால், கமிஷன் தருவதாக பேசியது வெளியாது.

108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், இந்த ஆடியோ வைரலானது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது,  ஆடியோவின் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து குளோபல் மருத்துவமனை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டத்தின் கீழ பயனாளிகள் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதுபோல, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் தற்காலிக ஓட்டுனர் பணியில் இருந்த 10 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர பணியில் இருந்த ஓட்டுனர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.