சென்னை: உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

சென்னையில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த கொட்டும் மழையிலும் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  108 அவசர கால ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார்.

ரூ. 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான. புதிய அவசர கால ஊர்தி சேவைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 500 அவசர கால ஊர்திகள் சேவை துவங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து முதற்கட்டமாக கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி 90 அவசரகால ஊர்தியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று 2வது கட்டமாக ரூ. 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த  நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று விருதுநகரில் பேசிய முதல்வர்,  தமிழகத்தில் கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட அறிவித்தது குறிப்பிடத்தக்கது.