108ன் அலட்சியம்! வெளுத்தது மனிதம்?

Must read

1

வெள்ளத்தில் சிக்கிய சென்னை,கடலூர் மாவட்ட மக்களுக்கு உலகின் ஏதேதோ மூலைகளில் இருந்தெல்லாம் கொட்டியது நிவாரண உதவி. மனிதர்களுக்குள் இத்தனை ஈரமா என்று வியக்கவைத்தது நிஜம்.

ஆனால், வெள்ளம் வடிந்து சூரியன் தலை தூக்க… மனதின் ஈரமும் காய்ந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

இன்று காலை வேறொரு பணிக்காக சென்னை கோயம்பேடு செல்ல நேர்ந்தது. அங்கு கண்ட காட்சி, அடி வயிற்றை கலக்கிவிட்டது.. அத்தனை அதிர்ச்சி.

ப்ரீ பெய்ட் ஆட்டோ கவுண்ட்டருக்கு பின்புறம், அம்மா குடிநீர் கடையின் முன்புறம், டைம் ஆபீஸ் அருகில்… ஆயிரமாயிரம் பேர் வந்துசெல்லும் இடத்தில் கிடந்தார் அந்த மனிதர்.

d

 

முகெமல்லாம் தாடி மீசையுடன், மயங்கிக்கிடந்தார் அவர். தன்னையறியாமல் மலஜலம் கழித்திருந்தார்.  அந்தப்பக்கம் சென்ற பலர் மூக்கைப் பொத்தியவாறு கடந்தார்கள். சிலர்,  இயல்பாக கடந்தார்கள்.

பதறிப்போய் “அம்மா” குடிநீர் கடையில் இருந்தவரிடம் விசாரித்தேன்.

“மூணு நாளா இப்படி கிடக்குறாரு சார்.. என்ன பண்றதுன்னு தெரியல” என்றார் கடைக்காரர்.

அவரிடமே குடிநீர் பாட்டில் வாங்கி, அந்த முதியவர் முகத்தில் தெளித்தேன்… எழுப்பு நீரும், உணவும் கொடுக்கலாம் என்று.

அவர் முகத்தில் சலனமே இல்லை.

ஆகவே.. குற்றுயிராய் கிடக்கிறார் என்பது புரிந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று 108க்கு போன் செய்தேன்.

எடுத்த பெண் குரல், விவரத்தை கேட்டுவிட்டு, அப்படியே கட் செய்தது. மீண்டும் முயற்சித்தேன். இப்போது வேறு பெண் குரல். “சென்னை கோயம்பேடா.. இருங்க லயன் தர்றேன்..” என்றது. பின்னணி இசையில் காத்திருக்க, இன்னொரு பெண் லைனில் வந்தார். அவரிடம் விவரித்தேன்.

“அவரை க்ளீன் பண்ணி, வேறை கைலி உடுத்தி வைங்க.. வர்றோம்” என்றார்.

“அவர் யாரென்று தெரியவில்லை. உதவிக்கும் ஆள் இல்லை. புது கைலி வாங்கித்தருகிறேன்.. வாருங்கள்” என்றேன்.

“அப்ப நாங்க க்ளீ்ன் பண்ணணுமா… கட் பண்ணுங்க போனை… கட் பண்ணுங்க..” என்று அதட்டலாய் சொன்ன பெண்குரல், தானே லைனை கட் செய்தது.

அடுத்த முயற்சியாக, அருகில் இருந்த டைம் ஆபீஸ் சென்று, அங்கிருந்த அதிகாரியை சந்தித்தேன்.

“அந்த பெரியவர் மூணு நாளா இப்படியே கிடக்கிறாராம். நீங்க இங்கேதானே இருக்கீங்க.. உதவுங்களேன் சார்” என்றேன்.

அதற்கு அவர், “எங்களுக்கும் சங்கடம்தான் சார். ஒரே நாத்தம். நாங்க எங்க கொண்டு போய் அவரை போடுறது.. உயர் அதிகாரிய பாருங்க” என்றார்.

 

e

அதற்குள் ஒரு 108 வேன் வந்தது. அதில் இருந்த பெண்மணியிடம் “முதியவரை அழைக்கத்தானே வந்தீர்கள்” என்றேன். “ஆமாம்” என்ற அந்த பெண்மணி, அந்த முதியவரை தனது வண்டியிலிருந்தே பார்த்தார். முகம் சுழித்தார்.

“இதுமாதிர கேஸ்களுக்கு கார்ப்பரேசன் வண்டிதான்தான் சரி. 108 வண்டியில அழைச்சுகிட்டு போக முடியுமா.. ஆக்ஸிடண்ட், பிரசவம் மாதிரி பெரிய கேஸ்களுக்குத்தான் இந்த வண்டி.. இப்படி நாத்தம் பிடிச்சி கிடக்குறவங்களுக்கு இல்லே..” என்றார் கோபமாக.

“இவரும் உயிருக்கு போடுற மாதிரித்தான் தெரியுது..” என்று நான் சொல்ல, “இப்படி ஒரு கேஸ எடுத்தா, அப்புறம் தொடர்ந்து இதே மாதிரி கேஸ்ககளுக்கு கூப்பிடுவாங்க..” என்று அவர் குறுக்கிட… வேன் கிளம்பிவிட்டது.கைவிட்டு கிளம்பிய 108

கைவிட்டு கிளம்பிய 108

 

மலஜலத்துடன் குற்றுயிராகக் கிடந்தால் 108ல் ஏற்ற மாட்டார்களா.. கார்ப்பரேசனின் குப்பை வண்டியில்தான் வர வேண்டுமா..?

கேள்விகளுடன் அடுத்தகட்ட முயற்சியாக, “உயர் அதிகாரி” செந்தில் என்பவரை தேடிப்போய் பார்த்தேன். அவரிடம் தகவல் சொன்னேன். முழுவதும் கேட்டவர், “நாங்க என்ன செய்யறது..” என்று முணங்கியபடியே, செக்யூரிட்டியை அழைத்து, போய் பாருங்க..” என்றார்.

அடுத்து, “நான்  பார்த்துக்கிறேன்..” என்றபடியே  என்றார்.

“நான் வேணும்னா உதவிக்கு இருக்கிறேன்” என்று நான் சொல்ல.. “வேண்டாம்… ஜிஹெச்ல சொல்லி, அவரை அங்கே சேர்த்திடலாம்” என்றார்.

அந்த நம்பிக்கையுடன் நான் கிளம்பினேன்.

z

 

சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது:

“வெள்ள நேரத்தில் பொங்கிய மனிதாபிமானம் என்பது, குழு மனப்பான்மை. (மாப் மெண்ட்டாலிட்டி) ஏதோ ஒரு சாகசம் செய்ய வேண்டும், மற்றவர் அதைச் செய்ய.. நாமும் இறங்கலாம் என்ற மனநிலை. இதே மனநிலைதான் கலவரத்தின் போதும் (எதிர்மறையாய்) செயல்படுகிறது. மற்றபடி வேறில்லை!”

அது சரிதானோ என்று தோன்றுகிறது…

ஏனென்றால், ஆயிரமாயிரம் பேர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் குற்றுயிராய் கிடக்கிறார் ஒருவர். வெள்ள சேதத்தின் போது  மனம் பதறி, நிவாரண உதவிகளில் இறங்கிய நல்ல மனதுடையவர்களில் ஒருவர்கூடவா இந்த பரிதாப மனிதரை கண்டிருக்க மாட்டார்?

யாரும் உதவ வில்லையே..!

  • டி.வி.எஸ். சோமு

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article