டெல்லி: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய நடத்திய என்ஐஏ  ரெய்டில் 106 பிஎஃப்ஐ (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா)  பிரமுகர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரிலான இஸ்லாமிய கட்சி, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்த வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தற்போது புகார்கள் அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையானது,  தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், குழுக்கள், பிஎஃப்ஐ அலுவலகங்கள் என  பல இடங்களிலும் நடந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட இயங்கங்களுடன் தொடர்பில் உள்ளதாக  சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள்,  பிஎஃப்ஐயின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை,  கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மற்றும் தென்காசியில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளிலும், சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள எஃப்பிஐ மாநில தலைமை அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை, கரும்புக்கடையில் உள்ள பிஎஃப்ஐ நிர்வாகி இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் , இஸ்மாயிலை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு போராட்டம், கூச்சல், குழப்பம் என பதற்றமான சூழல் உருவானது. கடலூரிலும் சோதனை, கைது: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அபூபக்கர் மகன் பையாஸ் அகமது (32). இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.22) அதிகாலையில் அவரது வீட்டுக்கு சென்ற என்.ஐ. ஏ அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டை சோதனை செய்து அவர் பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து அழைத்துச் சென்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள், அவரது உறவினர்கள் சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பயாஸ் அகமது வீடு இருக்கும் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் தடுப்புகள் அமைத்து யாரையும் உள்ளே விடாமல் அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

மேலும்,  தெலங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11  மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இதுவரை  பாப்புலர் பிரண்ப் ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 106 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎஃப்ஐ-யின் தேசிய, மாநில, உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகின்றன. மாநிலத் தலைமை அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மாநிலம் வாரியாக விவரம்:

தமிழ்நாடு –  10 பேர்

பதுச்சேரி – 3 பேர்

ஆந்திரா மாநிலம் – 5 பேர்

அசாம் – 9 பேர்

டெல்லி – 3 பேர்

கர்நாடகா – 20 பேர்

கேரளா – 22 பேர்

ராஜஸ்தான் – 2 பேர்

உத்தரபிரதேசம் – 8 பேர் 

மகாராஷ்டிரா – 20 பேர்

மத்திய பிரதேசம் – 4 பேர்