சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கடைசி நாள் அமர்வில், 2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு  குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். இதில்,  நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,215.58 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022-2023-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 18-ஆம் தேதி) தாக்கல் செய்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் வரும் 24-ஆம் தேதி அதாவது இன்று வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த மறுநாள் (மார்ச் 19-ஆம் தேதி) வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள், முதலமைச்சர் பதிலளித்தனர்.

இன்றைய அமர்வில், 2021-2022-ம் ஆண்டிற்கான 10,567.01 கோடி ரூபாய் துணை மதிப்பீடுக்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கான அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அப்போது,  2021-2022-ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன என்று கூறியவர், ஒதுக்கீடு குறித்த விவாரங்கள் குறித்து பேசினார்.

புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கம் என்று கூறியதுடன்,  இந்த  நிதி ஒதுக்கீட்டில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என்றார். அதன்படி,

 கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் 333.55 கோடி ரூபாய்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 212.92 கோடி ரூபாய்.

நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,215.58 கோடி ரூபாய்.

கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் 1,140.31 கோடி ரூபாய்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி ரூபாய்.

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடி ரூபாய் உள்பட பல்வேறு நிதிஒதுக்கீடுகள் குறித்து விவரித்தார்.

தொடர்ந்து பேசியவர், பேரவைத் தலைவரே, 2021-2022-ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன் என்றார்.