மதுரை: உலகப்புகழ் பெற்றஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இன்றைய போட்டியில் 1022 காளைகள் பங்குபெற்றன. இது வரலாற்று சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த் நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. இன்றைய போட்டியினை வணிகவரி & பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை எம்.பி. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர் IAS, மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று காலை 7.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700காளைகளுடன் , 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . போட்டியை காண்பதற்காக 150பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபட்டதாககூறப்பட்டது.
ஆனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு, ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். ஏராளமானபரிசு பொருட்களும், தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் தங்க நாணயங்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பல சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், மாலை 5மணிக்கு போட்டிகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் மட்டும் வரலாறு காணாத அளவில், சுமார் 1022 காளைகள் பங்குபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றும் மருத்துவ உதவிக்காக 108ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.