சென்னை: சென்னையில்  ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள மாநகர காவல் ஆணையர் அருண்,   குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை நேரில் அழைத்து  பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என சென்னையில் கடந்த ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்  கொலையைத் தொடர்ந்து,   ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிடப்பட்டது.

கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள், தொடர்ச்சியாக திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட பல்வேறு வகையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி முதல் இன்று (ஜூலை 8) வரையிலான ஓராண்டில் 1,002 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்ட அலுவலகப் பிரிவில் பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட காவல் குழுவினரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குண்டர் சட்டம் என்பது என்ன?

குண்டர் சட்டம் என்பது குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சட்டம் அல்ல, மாறாக, அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். ஆனால், சமீப காலமாக குண்டர் சட்டம் என்பது சம்பந்தபட்ட நபர்களை விசாரணையின்றி சிறையில் அடைக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குண்டர்கள் மற்றும் சமூக விரோதிகள் (தடுப்பு) சட்டம், 1982, முக்கியமாக தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போடப்படுகிறது. சமூகத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்காக கொண்டுவரப்பட்டது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தவும், சமூக விரோத செயல்களை தடுக்கவும் இந்த சட்டம் உதவுகிறது. இவர்கள் சமூகத்தில் அமைதிக்கும், ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிப்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

குறிப்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நில அபகரிப்பு, திருட்டு, போதைப் பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது இந்த சட்டம் பாய்கிறது.
மேலும்,  ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். அது மட்டுமின்றி,  சமூகத்தில் அமைதிக்கும், ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள்,  பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

இந்த சட்டத்தின் கீழ், ஒருவரை ஓராண்டு வரை எவ்வித விசாரணையும் இன்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார். அவர்கள்மீது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள், உயர்நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.