சென்னை

மிழக வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன.

கடந்த மாதம் 16 ஆம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.   அந்த பட்டியலின் படி தமிழகத்தில் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர்.  இந்த பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய இந்த மாதம் 15 வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

பணி புரிவோர் வசதிக்காக நவம்பர் மாதம் 21, 22 மற்றும் டிசம்பர் மாதம் 12, 13 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.  நேற்று மூன்றாம் கட்ட முகாம் முடிவடைந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட முகாம் நடைபெற உள்ளது.  பெயர் சேர்க்க விண்ணப்பித்தோர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு வரும் ஜனவரி மாதம் 20 ஆம் ட்க்ஹேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஆளும் கட்சியினர் தலையீட்டால் பல பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சேவாசதன் பள்ளியில் நடந்த முகாமும் திமுக தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலு திடீரென வந்து ஆய்வு நடத்தினார்.

இது குறித்து டி ஆர் பாலு செய்தியாளர்களிடம், “தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் அதிகளவில் இறந்தவர்கள் பெயர்கள் எடுக்கப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களிடம், இந்த அட்டை செல்லாது. நீங்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் கூறி பெயர்களை நீக்குகின்றனர். இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைப் போல் விழுப்புரம், திருச்சி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் திமுக தலைவர்கள் ஆய்வு நடத்தி முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.