சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்றுமுதல் முழு ஊரடஙகு கண்காணிப்பு பணியில் 10000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக  சென்னை மாநகர  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி  வெளியே செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

சென்னை முழுவதும்   320 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்தால்,, வாகனம் பறிமுதல்செய்யப்படும் உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகர மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கத்தை விட இந்த முறை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை  தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் வாகனம் பறிமுதல், விதிகளை மீறுபவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  கடந்த லாக்டவுனின்போது காவல்துறையினர் மென்மைக நடந்துகொள்ள அறிவுறுத்தப்பபட்ட நிலையில்,  இந்த முறை கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்தி விதிகளை மீறி வெளியே வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் 12 காவல் மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை சாவடிகளும், 153 இடங்களில் வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் சுழற்சி முறையில் 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்தியதால் இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு காவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகிறது என்று கூறியவர், முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில் இது  84 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இப்பிரச்னையிலிருந்து அவர்களை மீட்க சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து காவல்துறை தலைமை இயக்குநருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து காவலர்களுக்கு சுழற்சி முறையில் 20 சதவிகித காவலர்களுக்கு விடுப்பு வழங்குமாறு டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கெனவே 10 சதவிகித காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.