டில்லி,
புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக தற்போது வெளியாகி உள்ள 2000 ரூபாய் நோட்டு என்னவாகும் என கேள்வி எழும்பியுள்ளது.
கடந்த நவம்பர் 8ந் தேதி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து புதிய 2000 நோட்டுகள் வெளியானது.
பழைய நோட்டுக்கள் வங்கிகளில் மாற்ற மக்கள் படாதபாடுபட்டனர். காலைமுதல் வங்கிகளின் வாசல்களில் காத்துகிடந்து பலர் மரணமும் அடைந்தனர்.
மேலும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லரை கிடைக்காமலும் பொதுமக்கள் தவித்தனர்.
தற்போது நிலமை ஓரளவு சீராக வரும் வேளையில், செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது. சில்லரை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், இறுதி முடிவு ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மேலும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வண்ணத்தில், புதிய வடிவமைப்பில் 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெளியாக இருக்கும் புதிய 1000 ரூபாய் நோட்டு, பார்வையற்ற மாற்று திறானளிகளும் அறிந்து கொள்ளும்வகையில் இருக்கும். தற்போது, இதற்கான பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.