கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட திரையரங்கள், பின்னர் கடந்த 2020ம்ஆண்டு நவம்பர் மாதம் 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 100 சதவிகிதம் திறக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும், நடிகர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து, பொங்கலுக்கு 100 சதவீதமாக உயர்த்திக்கொள்ள தமிழகஅரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.
மருத்துவ நிபுணர்கள் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்தியஅரசும் தமிழகஅரசின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்திஉள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
தமிழகஅரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை செயல்பட அனுமதி அளித்துள்ளது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை. எனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.