டேராடூன்

டேராடூன் பகுதியில் உள்ள பசுக்கள் காப்பகத்தில் பிளாஸ்டிக்கை தின்ற 100 பசுக்கள் மரணம் அடைந்துள்ளன.

மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்ததில்  இருந்து பசு பாதுகாப்புக்குப் பல திட்டங்கள் தீட்டி வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களில் பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளன. ஆதரவற்று தெருவில் திரியும் பசுக்கள் அந்த பாதுகாப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த காப்பகங்கள் அதிக அளவில் உள்ளன.

இவ்வாறு பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகாண்ட மாநிலத்தின் டேராடூன் நகரில் உள்ள பசுக்கள் காப்பகத்தில் கடந்த ஜூலை மாதம் சுமார் 100 பசுக்கள் மரணம் அடைந்தன. இதற்கு நோய்த் தொற்று காரணம் என மருத்துவர்கள் கருதினர். அந்த  தொற்று குறித்துக் கண்டறிய அந்த பசுக்களில் 2 பசுக்களின் சடலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த 2 பசுக்களின் வயிற்றில் இருந்து சுமார் 40 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் கிடைத்துள்ளன.

இது குறித்து ஒரு மருத்துவர், “இந்த பசுக்களின் மரணம் அதிக  பிளாஸ்டிக்கை தின்றதால் ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பசுக்களின் மரணத்துக்கும் பிளாஸ்டிக்  காரணமாக இருக்கலாம் எனக் கூற முடியாது. ஆனால் இந்த இரு பசுக்களைப் போல் மற்ற பசுக்களும் பிளாஸ்டிக்கை தின்றதால் மரணம் அடைந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு காப்பகத்தில் உள்ள  பசுக்களுக்கு அரசு உணவளித்து வருவதாகச் சொல்லி வரும் நிலையில் பசுக்கள் பிளாஸ்டிக்கை தின்று மரணமடைந்தது மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.