வேலூர்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 தடுப்பணைக்கள் கட்டப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, ஏரி குளங்கள் நிரம்பியதுடன் தடுப்பணை உள்பட பல இங்களில் பாலங்கள், தரைப்பாலங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. வேலூர் அருகே பாலாற்றில் 90 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுண்டு ஓடியது. இதனால் பல பகுதிகளில் உள்ள பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சில பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
பாலாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று நேரில் செய்து ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அடுத்த மேல்பாடி பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் மற்றும் வெள்ள சேதங்களை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பாலாற்றில் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் கட்ட திமுக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இதுகுறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர், முதற்கட்டமாக இந்த ஆண்டு முடிவதற்குள் 100 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் தடுப்பணை கட்டி முடிக்க முடியுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.