onankuppam-fields-300x199

மீபத்திய வெள்ளத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சென்னை, கடலூர் மாவட்டங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை, நிவாரணத்திலும் தொய்வு என பல வித குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கிறது தமிழக அரசு.

இந்த நிலையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காவது உரிய நிவாரணம் கிடைக்குமா.. விவசாயம் மீண்டும் செழிக்க அரசு உதவுமா” என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் கடலூர் மாவட்ட விவசாயிகள்.

இது குறித்து கடலூர் மாவட்ட விவசாயி லட்சுமணனிடம் பேசினோம். அவர், “இம்மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகிவிட்டன. விவசாயிகள் கண்களில் ரத்தக்கண்ணீர். அவர்களது உழைப்பு, பணம் மொத்தமும் பாழாகிவிட்டது.

நெல் பயிர்களில் பெரும் பகுதி கதிர் பூ விடும் நேரம் இது. அந்த சமயத்தில் நீரில் மூழ்கிவிட்டதால், விதைத்த செலவைக்கூட பெற முடியாது.

தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு நெல் பயிர் பாதித்தால், 5 ஆயிரத்து 400 ரூபாய் அதாவது, ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் அளிப்பதாக கூறுயிருக்கிறது.

இதை எந்த அடிப்படையில் நிர்ணயித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்வதில் ஆரம்பித்து அறுவடை வரை 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த நிலையில அரசு கொடுக்கும் நிவாரணத்தைக் கொண்டு உரம் வாங்கிய கடனைக்கூட திருப்ப முடியாது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும். அதோடு, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிமிரவே முடியும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்டத்தில் விவசாயமே நடக்காது” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (சி.பி.எம்) கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். அவர், “தற்போது ஏராளமான தொழிலாளர்கள்.. குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் பணி இன்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 100 நாள் வேலையை கொடுத்தால், அவர்களுக்குச் செலவுக்கான பணம் கிடைக்கும். அதே நேரம் வெள்ள சேத பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் நடக்கும்” என்றார்.

–  யாழன்