சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய  தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி  துறை அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி அக்டோபர் 3ந்தேதி தொடங்கியது.  15 நாட்கள் நடைபெறும் இந்த  கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகப் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் பட்டு வேட்டிகள், படுக்கை விரிப் புகள், மற்றும் பருத்தி ஆடைகள், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தவர் பயன்படுத்தும் ஆடைகள் என விதவிதமான ஆடைகள் கண்காட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், ராசிபுரம், திருப்பூர் என கைத்தறி மற்றும் பட்டுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் விதவிதமான சேலைகள் பட்டு வேட்டிகள் படுக்கை விரிப்புகள், விரிப்புகள் என விதவி மான அனைத்து வகையான ஆடைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

கைத்தறி நெசவாளர்களால் வடிவமைக்கப்பட்ட பூம்பட்டு புதுமணப்பட்டு மாங்கல்ய பட்டு, பருத்தி நூலால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள், தாய் மார்கள் பயன்படுத்தக்கூடிய தாய்-சேய் பெட்டகம் என்று அழைக்கப்படும் சிறப்பு பை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தாய்-சேய் பெட்டகப்பையில் குழந்தைகளுக்கு தேவையான பால் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவர்களை வைப்பதற்கு தனித்தனியாக உள்பகுதியில் பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் அனைத்துக்கும் 30 சதவீதம் முதல் 50 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதே போன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 பெண்களுக்கு பிடித்தமான,  ஒரிஜினல் பட்டுச்சேலைகள் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் ஆயிரம் ரூபாயில் இருந்தும் சேலைகள் கிடைக்கிறது.

மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கைத்தறி துணி வகைகளும் கண்காட்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர்.

கண்காட்சியின் முகப்பில் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்த எந்த வகையான சேலைகள் கண்காட்சியில் உள்ளன என்பது பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை, ஜெயங்கொண்டம், மதுரை, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, வேலூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் துணி வகைகள் ஆகியவைகள் பற்றி விரிவான விளக்கங்களுடன் கண்காட்சி பலகை வைத்திருப்பதும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

அத்துடன்,  பூம்புகார் நிறுவனம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரங்கில் ரூ.250-லிருந்து ரூ.12 லட்சம் வரையில் கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

திருவள்ளுவர் சிலை, கலைஞர் கருணாநிதி சிலை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.  ஐம்பொன் லட்சுமி சிலை ஒன்று ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கையில் விளக்குடன் கூடிய ஒரு ஜோடி பாவை விளக்கு ஒன்று ரூ.12 லட்சத்துக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள்  மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பெண்கள் கண்காட்சியை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.