டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10% இடங்களை ஒதுக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பல கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில், மத்தியஅரசு அமைத்த குழுவின் அறிக்கையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா, சூர்யகாந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தவுள்ளது. அதேபோல் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு குறித்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.