சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 10 நீதிபதிகளை நியமிக்க, கொலிஜியத்தின் பரிந்துரையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்தநீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது 54 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால், கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு வந்தது. அதன்படி மாவட்ட நீதிபதிகள் பலரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க கொலிஜியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற கொலிஜியம் அதில் 10 பேரை தேர்வு செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள, கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் , முரளி சங்கர் , மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர், உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இதன்மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54லிருந்து, 64 ஆக உயரும். 10 புதிய நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர், தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது